கழிவுநீர் கலக்கும் குளத்தில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு; பேரூராட்சி அலுவலகம் முன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு

பூதப்பாண்டியில் கழிவுநீர் கலக்கும் குளத்தில், குடிநீர் எடுக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-04 12:20 GMT
பூதப்பாண்டி, 

பூதப்பாண்டியை அடுத்த மார்த்தால் அருகே பட்டினி குளம் உள்ளது. இந்த குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்போது இந்த குளத்தில் கழிவு நீர் வந்து கலப்பதாலும், அப்பகுதியில் உள்ளவர்கள் கழிவு பொருட்களை கொண்டு வந்து, கொட்டுவதாலும் குளம் மாசுபட்டது.

இதனால் அந்த குளத்தில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அதே ஆழ்குழாய் கிணற்றை மேம்படுத்தி, அதிலிருந்து குடிநீர் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை, பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது.

உடனே பெண்கள் பூதப்பாண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். அவர்கள் கழிவு நீர் குளத்தில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் எடுக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினார்கள்.

இதை அறிந்த செயல் அலுவலர் மகாராஜன் அங்கு திரண்டிருந்த பெண்களிடம் மனுவை பெற்று, குளத்தில் இருந்து குடிநீர் எடுக்கும் நடவடிக்கையை, கைவிடுவதாக கூறினார். அதன் பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலக வெளிப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்