போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம்

கொரோனா பரிசோதனைக்காக வந்தபோது போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-05-04 14:31 GMT
ஊட்டி

கொரோனா பரிசோதனைக்காக வந்தபோது போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிரடிப்படையினர் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொரோனா பரிசோதனை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அப்பர்பவானியில் அதிரடிப்படை முகாம் உள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டி இருப்பதால், அதிரடிப்படையினர் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த முகாமில் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அவருடன் பணிபுரிந்த மற்ற 10 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

வாகனம் கவிழ்ந்தது 

இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்வதற்காக 10 அதிரடிப்படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். வாகனத்தை டிரைவர் ஜெயக்குமார் ஓட்டினார். 

அவர்கள் அவைரும் கோரகுந்தா-மஞ்சூர் சாலை இடையே தாய்சோலை பகுதியில் 33-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, திடீரென வாகனத்தின் ஸ்டீரிங் லாக் ஆனது. 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த மேட்டில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

7 பேர் படுகாயம்

இதனால் வாகனத்தில் சென்ற நித்யானந்தம் (வயது 30), அன்பு அரசன் (31), கதிரவன் (27), மன்சூர் (27), சரவணன் (45), மகேந்திரன் (38), அருளப்பன் (27) ஆகிய 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரத்தினவேல் (32), சந்தோஷ் (33), டிரைவர் ஆகிய 3 பேர் லேசான காயம் அடைந்தனர். 

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு மஞ்சூர் அரசு மருத்துவமனையில் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 7 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த விபத்து குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்