யோகா ஆசிரியை கொன்று புதைப்பு கடிதம் எழுதிவிட்டு வக்கீல் தற்கொலை

மதுரை அருகே யோகா ஆசிரியை கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தனது வீட்டுக்குள் புதைத்து, இதுதொடர்பாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த வக்கீலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியை உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-04 14:41 GMT
திருமங்கலம்,மே.-
மதுரை அருகே யோகா ஆசிரியை கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தனது வீட்டுக்குள் புதைத்து, இதுதொடர்பாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த வக்கீலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியை உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வக்கீல்-யோகா ஆசிரியை
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறுமுகம் நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 42). திருமங்கலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். 
இவருடைய மனைவி விஜி (35). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 8 வயதில் பிரியா என்ற மகள் உள்ளாள்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரை முனிச்சாலையில் உள்ள பெற்றோர் வீட்டில் விஜி வசித்து வருகிறார். 
மகள் பிரியா அப்பகுதியில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவியிடம் (30) யோகாசன பயிற்சி பெற்று வந்தார். சித்ராேதவியும் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்்தார். சித்ராதேவியின் கணவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கள்ளக்காதல்
இந்தநிலையில் மகள் பிரியாவை ஹரி கிருஷ்ணன்தான் யோகா வகுப்புக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கும், சித்ராதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகியது.
அதன்பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், சிறுமி பிரியா அவர்களுடன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது..
திடீர் மாயம்
இந்த நிலையில் சித்ராதேவி கடந்த 1-ந்தேதி திடீரென மாயமானார். அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
பின்னர் இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சித்ராதேவியின் தந்தை கண்ணையா புகார் அளித்தார். அதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே வக்கீல் ஹரிகிருஷ்ணன்தான் தனது மகள் சித்ராதேவியை கடத்திச் சென்றுவிட்டதாக கூறி கோர்ட்டில் கண்ணையா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்..
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் திருமங்கலம் ஆறுமுகம் நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபம் அருகில் ஹரிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் வந்ததும் போலீசார் விரைந்து வந்து, ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த ஆடையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், சித்ராதேவியை கொலை செய்து அவரது உடலை தனது வீட்டில் புதைத்திருப்பதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த கடிதத்தில் அதிர்ச்சி தகவலை ஹரிகிருஷ்ணன் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
உடனே சித்ராதேவியை அவர் கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
சமீப காலமாக சிறுமி பிரியாவை சித்ராதேவி சரிவர கவனிக்கவில்லை என தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்ராதேவியை ஹரிகிருஷ்ணன் கண்டித்துள்ளார். அப்போது தன்னை 2-வதாக திருமணம் செய்துகொள்ளுமாறு சித்ராதேவி அவரை வற்புறுத்தி இருக்கிறார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அவரை கொன்று, தனது வீட்டிலயே ஹரிகிருஷ்ணன் புதைத்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
உடல் தோண்டி எடுக்க முடிவு
இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஹரிகிருஷ்ணனின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி வீட்டுக்குள்ளேயே கழிப்பறை அருகே படுத்துக்கொண்டது. அங்குதான் சித்ராதேவியின் உடல் புதைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
திருமங்கலம் தாசில்தார் முன்னிலையில் சித்ராதேவியின் உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 
சித்ராதேவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவர் எப்படி கொல்லப்பட்டார்? என்பது பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
யோகா ஆசிரியையான கள்ளக்காதலியை கொன்று தனது வீட்டுக்குள் புதைத்த வக்கீல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்