கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். புதிதாக 305 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-05-04 16:27 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 31 ஆயிரத்து 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 305 பேருக்கு பாதிப்பு உறுதியானது. 
இவர்களில் பெங்களூரு, ஜார்க்கண்ட், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து கடலூர், குமராட்சி, கம்மாபுரம், குமராட்சி, நல்லூர் வந்த 7 பேருக்கும், சென்னை, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடலூர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குமராட்சி வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

253 பேர் குணமடைந்தனர்

இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 55 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்த நோயாளிக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 235 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 935 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 253 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 329 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-

7 பேர் பலி

கடலூரை சேர்ந்த 57 வயது ஆண், விருத்தாசலத்தை சேர்ந்த 57 வயது ஆண் ஆகிய 2 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், நல்லூரை சேர்ந்த 61 வயது முதியவர் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 50 வயது ஆண், பெண்ணாடத்தை சேர்ந்த 49 வயது ஆண், சிதம்பரத்தை சேர்ந்த 56 வயது ஆண், 70 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 336 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நோய்த்தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரிசோதனை

இதற்கிடையில் கொரோனா பாதித்த 1718 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.431 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் 85 உள்ளது.

மேலும் செய்திகள்