மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கிய எலும்புத்துண்டு அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கிய எலும்புத்துண்டு அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

Update: 2021-05-04 17:35 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த ஆருத்ராபட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ராஜாமணி (வயது 65). நேற்று முன்தினம் காலையில் வீட்டில் கோழிக்கறி சாப்பிடும்போது எலும்புத் துண்டு ஒன்று ராஜாமணியின் உணவுக் குழாயில் சிக்கியுள்ளது. இதனால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது உணவு குழாயில் எலும்புத்துண்டு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரால் உணவு ஏதும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.

 இதையடுத்து அவர் நேற்று காலை  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு மருத்துவ கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் டாக்டர் இளஞ்செழியன் தலைமையில் டாக்டர்கள் கமலக்கண்ணன், சிந்துமதி, ராஜா செல்வம், மயக்கவியல் நிபுணர் திவாகர் மற்றும் மருத்துவக்குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உணவுக்குழாயில் சிக்கியிருந்த 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான எலும்புத் துண்டை மருத்துவ குழுவினர் நீக்கி சாதனை செய்தனர். 

தற்போது மூதாட்டி ராஜாமணி நலமாக உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இந்த வேளையிலும் அறுவை சிகிச்சை இன்றி எலும்புத்துண்டை அகற்றிய  மருத்துவ குழுவினரை அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்