அரியலூரில் சுட்டெரித்த வெயில்

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதையடுத்து அரியலூரில் வெயில் சுட்டெரித்தது.

Update: 2021-05-04 20:05 GMT
அரியலூர்,

தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. சுட்டெரித்த கத்தரி வெயிலின் தாக்கத்தால் அரியலூரில் பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஒரு சிலர் குடை, விசிறி ஆகியவற்றை வைத்திருந்ததை காண முடிந்தது.
கடைவீதியில் பொருட்கள் வாங்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். பழரசம், இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம், கம்மங்கூழ் விற்கும் கடைகளில் மக்கள் அதிகமாக குவிந்தனர்.
வெப்பத்தின் தாக்கம்
நகரில் உள்ள செட்டி ஏரி, அய்யப்பன் ஏரி ஆகியவற்றில் குறைந்த அளவே நீர் உள்ளது. மற்ற குளம், குட்டைகளில் நீர் வற்றிப்போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. இதனால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. எனவே கோடை மழை பெய்தால் வெப்பம் தணியும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் வராது, என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அரியலூரில் பஸ் நிலையத்தில் இருந்த கான்கிரீட் கட்டிடம் இடிக்கப்பட்டு, இரும்பு தகடுகளால் தற்காலிக பயணிகள் தங்கும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நகர் முழுவதும் இருந்த மண் சாலைகள் சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டதால், வெப்பத்தின் தாக்கம் நகரில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்