சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல்: சு.முத்துசாமிக்கு அமைச்சர் பதவி- மகிழ்ச்சியில் ஈரோடு மக்கள்

சு.முத்துசாமிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வலம் வருவதால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Update: 2021-05-04 22:26 GMT
ஈரோடு
சு.முத்துசாமிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வலம்  வருவதால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 
சு.முத்துசாமி வெற்றி
சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. இந்த அமைச்சரவையில் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற சு.முத்துசாமிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடநத 2 தேர்தல்களாக தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அதுவும் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 2 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. இதில் ஒரு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி வெற்றி பெற்று உள்ளார். இவரது வெற்றியின் மூலம் ஈரோடு மேற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாற உள்ளது. காரணம், சு.முத்துசாமி வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதுதான்.
அமைச்சர்
 தொழில்துறையை முக்கிய வளர்ச்சித்தொழிலாக கொண்டு உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டால் தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்பு உள்ளது.
அதே நேரம், ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல், சாலை வசதிகள், மேம்பாலங்கள், அரசு பள்ளிக்கூடங்களுக்கான தேவைகள், அரசு கட்டிடங்கள், வீட்டு வசதிவாரியம் என்று அனைத்து துறைகளுக்கும் கூடுதல் வசதிகள், மேம்பாடுகள் தேவை இருக்கிறது. இந்த தேவைகளையும் முழு மனதுடன் நிறைவேற்ற வேண்டும். ஈரோட்டை பொறுத்தவரை வேண்டும் வேண்டும் என்று ஏராளமான வேண்டும்கள் உள்ளன.
நிறைவேறுமா?
ஈரோடு மக்கள் விரும்பியபடி ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெற்று இருக்கிறார் சு.முத்துசாமி. மக்கள் விரும்பியபடி அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இனி ஈரோட்டின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு சு.முத்துசாமி கைகளில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த ஒரு மக்கள் பிரதிநிதியிடமும் வைக்காத ஒரு நம்பிக்கையை எதிர்பார்ப்பை கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் சு.முத்துசாமி மீது வைத்து இருக்கிறார்கள். ஈரோட்டு மக்களின் கனவு, ஆசைகள் நிறைவேறுமா?... அவருக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி அதற்கு பயன்படுமா?... இல்லை பொதுப்பணித்துறை, அவர் ஏற்கனவே அதிகம் பணியாற்றிய போக்குவரத்துறை ஆகியவற்றை கேட்டுப்பெற்று மக்கள் நலனுக்காக பணிகள் மேற்கொள்வாரா? என்பதை ஈரோடு மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்