சேலம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கான இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது

போட்டித்தேர்வுக்கான இணையதளம்

Update: 2021-05-04 22:41 GMT
சேலம்:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கான இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
இலவச பயிற்சி வகுப்பு
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைவரும் வீட்டில் இருந்தபடியே பயனடையும் வகையில் இணையதளம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு துறை மூலம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு இணையவழி மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படஉள்ளது.
பதிவிறக்கம்
அதன்படி சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு போட்டித்தேர்வுக்கான இணையதளம் தொடங்கப்படுகிறது. அதன்படி தொகுதி 2 மற்றும் தொகுதி 4- க்கான புதிய இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
தொடர்ந்து வருகிற 10-ந்தேதி ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், பாடக்குறிப்புகள், போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாதிரித்தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்