ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு

சென்னை வானகரம், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளனர்.

Update: 2021-05-05 02:39 GMT
சென்னை, 

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு சொந்தமான வணிக வளாகம் அதே பகுதியில் உள்ளது. தனது வணிக வளாகத்திற்கு வழங்கப்பட்ட உயர் அழுத்த மின் இணைப்பை புதுப்பிக்க சான்றிதழ் பெறுவதற்காக அம்பத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு அம்பத்தூர் கோட்ட மின் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தேனப்பன் (54) என்பவர் வணிக வளாகத்திற்கு உயர் மின் இணைப்பை புதுப்பிக்கவும், லிப்ட் இயக்கத்திற்கு அனுமதிக்கவும் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார்.

லஞ்சம் தர விரும்பாத சுப்பையா இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 9-10-2017 அன்று லஞ்ச ஒழிப்பு துறையினரால் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொண்டு சென்ற சுப்பையா அங்கு பணியில் இருந்த மின் ஆய்வாளர் தேனப்பனிடம் கொடுத்தார். அவர் லஞ்ச பணத்தை பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் மின் ஆய்வாளர் தேனப்பனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு வக்கீலாக அமுதா வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் வேலரஸ் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து தேனப்பனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தேனப்பனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்