வெவ்வேறு போக்சோ வழக்குகளில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

வெவ்ேவறு போக்சோ வழக்குகளில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-05-05 17:51 GMT
புதுக்கோட்டை:
பாலியல் வழக்கு 
புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமி மயங்கிய நிலையில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மீண்டும் ஒரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததால், அவருக்கும், அவரது பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுத்து கருவை கலைக்கும் மாத்திரைகளை வாங்கிகொடுத்து கட்டாயப்படுத்தி சிறுமியை சாப்பிட வைத்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் குணமடைந்தார். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பளித்தார். இதில் சுரேசுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், சிறுமியை கர்ப்பம் தரிக்க செய்ததால் மற்றொரு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், சிறுமிக்கு மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ததற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவர்களது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கிய நிலையில் தற்போது ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல மற்றொரு போக்சோ வழக்கில் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
பிளஸ்-2 மாணவி
விராலிமலை தாலுகாவில் பேராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூவ்காந்தி (28). இவர் அப்பகுதியில் ஜவுளி ஆடைகளுக்கு துணி தைக்க கூடிய கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். அப்பகுதியில் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் தையற்பயிற்சி பெற ராஜூவ்காந்தி கடையில் சேர்ந்தார். அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி ராஜீவ்காந்தி 3 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
மேலும் சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் பெற்றோர் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தார்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார். 
இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ராஜூவ்காந்திக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், சிறுமியை கடத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
ஒரே நாளில் 2 போக்சோ வழக்குகளில் தீர்ப்பு
புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் போக்சோ வழக்கில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு (2020) ஏம்பல் சிறுமி கொலை வழக்கில் கைதானவருக்கு தூக்கு தண்டனையும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு வழக்கிலும் கைதானவருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 வெவ்வேறு போக்சோ வழக்குகளில் வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். ஒரே நாளில் 2 வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது முதன் முறை என கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்