கரூர் அமராவதி ஆற்றில் கொட்டப்படும் கழிவு பொருட்களால் நோய் பரவும் அபாயம்

கரூர் அமராவதி ஆற்றில் கொட்டப்படும் கழிவு பொருட்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-05 18:21 GMT
கரூர்
அமராவதி ஆறு
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டல்கள், மற்றும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் கரூர் தொழில் நகரமாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் இருப்பதால் பல்வேறு இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது. 
இவ்வாறு பழைய கட்டிடங்கள் இடிக்கும் போது அதில் இருந்து சிமெண்டு கழிவுகள், மண் உள்ளிட்ட கான்கிரீட் பூச்சுகள் ஆகியவற்றை அள்ளி கொண்டு சென்று அமராவதி ஆற்றில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை 
மேலும் பழைய துணிகள், டெய்லர் கடைகளில் தேங்கும் எஞ்சிய துணிகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள், இறைச்சி கடைகளில் உள்ள கோழிகளின் இறகுகள், மலக்குடல்கள் உள்ளிட்டவற்றையும் அமராவதி ஆற்றில் வந்து கொட்டுகின்றனர். இதனால் ஆறு சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் கழிவுகளை கிளறி கொண்டு சண்டை போட்டுக்கொள்கிறது. இதனை தடுக்க செல்லும் பொதுமக்களை கடித்து விடுகிறது. இந்த கழிவு பொருட்கள் அனைத்தும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போது, அவை நீரில் அடித்து செல்லப்பட்டு ஆங்காங்கே அடைப்பை ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தை தடை செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆற்றில் கழிவு பொருட்களை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அப்பகுதி  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

மேலும் செய்திகள்