ரூ.65 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று கலெக்டர் கூறினார்.

Update: 2021-05-05 18:27 GMT
சிவகங்கை,

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று கலெக்டர் கூறினார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா பரவல்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகளவு பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.. பொதுமக்கள் நலன் கருதி நோய்த்தொற்று தடுப்பு தொடர்பாக ஒவ்வொருவரும் தற்பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட ஏதுவாகவும், பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கும், சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் பின்பற்றாமல் இருந்தமைக்காக வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களிடம் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என மேற்கண்ட துறைகள் ஒருங்கிணைந்து கண்காணிப்புப்பணிகள் மேற்கொண்டு அதன்மூலம் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்பவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ரூ.65 லட்சம் வசூல்

அதன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவிற்கு இணங்க, 17.3.2021 முதல் 4.5.2021 வரை விதிமுறை கடைபிடிக்காமல் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டமைக்காக சுகாதாரத்துறையின் மூலம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரமும், காவல்துறையின் மூலம் ரூ.48 லட்சத்து 52 ஆயிரத்து 900-ம், வருவாய்த்துறையின் மூலம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 360-ம்,  ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.85 ஆயிரத்து 900-ம், பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 300-ம், நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 200-ம் என மொத்தம் ரூ.65 லட்சத்து 5 ஆயிரத்து 660 அபராதத்தொகையாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
 மேலும், விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் கட்டணத்தொகை அதிகளவு வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. எனவே இதன் மூலமாவது பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடித்து தங்களைத்தானே பாதுகாத்து கொள்ளும் வகையில் இருந்திட வேண்டும்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்