பவானி அருகே டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியது; என்ஜினீயர் சாவு

பவானி அருகே டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியது. இதில் என்ஜினீயர் பலியானார்.

Update: 2021-05-05 21:24 GMT
பவானி
பவானி அருகே டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதியது. இதில் என்ஜினீயர் பலியானார். 
என்ஜினீயர்
அந்தியூரை அடுத்த நகலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகன் எட்வின் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயர். அந்தியூரில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு தன்னுடைய நண்பர்கள் அனீஸ் (23), ஜான்பால் (24) ஆகியோருடன் காரில் சென்றார். பின்னர் 3 பேரும் நகலூருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். 
மரத்தில் மோதியது
காரை ஜான்பால் ஒட்டினார். பவானி அடுத்த இரட்டை கரடு என்ற இடம் வந்தபோது காரின் பின் வலது பக்க டயர் திடீரென வெடித்தது. 
இதனால் நிலை தடுமாறிய கார் எதிரே வந்த ஒரு சரக்கு ஆட்டோவின் மீது மோதி நிற்காமல், அருகே இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
 இதில் காரின் பின் இருக்கையில் இருந்த எட்வின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். 
இறந்தார்...
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்புலன்சில் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்துவிட்டார். 
காரை ஓட்டி வந்த ஜான்பால் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த அனீஸ் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
 இதுகுறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்