ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு

ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-05-06 23:06 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
ஆணையாளரிடம் மனு
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுமார் 300 கடைகள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத செலவாக வீட்டு வாடகை, கடை வாடகை, வங்கி கடன், கல்விக் கடன் என்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் எங்கள் சமூக தொழிலாளர்கள் வருமானம் இருந்து கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளார்கள். அதன்பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு அனுமதித்த போதும் கொரோனா பயம் காரணமாக வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் தேவையான வருமானம் கிடைக்கவில்லை.
சலூன் கடைகளை திறக்க அனுமதி
கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் போராடி கொண்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் சலூன் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் கூட வாங்க கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
20 சதவீத தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். எனவே ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள சலூன் கடைகளை திறந்து பாதுகாப்புடன் தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்