ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன; வாகன போக்குவரத்தில் பாதிப்பு இல்லை

ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டாலும் வாகன போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.

Update: 2021-05-06 23:07 GMT
ஈரோடு
ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டாலும் வாகன போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. 
வெறிச்சோடியது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்புக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி நேற்று காலையில் இருந்து காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் மட்டும் இயங்கின. மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. எப்போதும் பரபரப்பாக இயங்கும் கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
திருவேங்கடசாமி வீதி, ஈஸ்ரவன் கோவில் வீதி உள்பட அனைத்து ஜவுளி விற்பனை பகுதிகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் வீதிகள் வெறிச்சோடி கிடந்தது.
காய்கறி சந்தை
ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி சந்தை காலையில் வழக்கம்போல இயங்கியது. மதியம் அனைத்து கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் அடைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் சந்தையில் கிருமிநாசினி தெளித்தனர். தூய்மைப்பணிகளும் நடந்தது. பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் பார்வையிட்டார். இதுபோல் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பட்டன.
மளிகைக்கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பட்டன. பால் மற்றும் மருந்து கடைகள் இயங்கின. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின.
பயணிகளுக்கு சிரமம்
வாகன போக்குவரத்து வழக்கம்போல இயங்கியது. சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
பஸ் நிலையத்தில் 12 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. டீக்கடைகளும் இல்லை. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் சோர்வை தீர்க்க ஒரு டீ கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, “ரெயில் நிலையங்களில் ரெயில் பயணிகளுக்காக கடைகள் இயங்குகின்றன. இதுபோல் பஸ் நிலையங்களிலும் உரிய அனுமதியுடன் ஒரு சில டீக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். பஸ்சில் பயணம் செய்வதால் ஏற்படும் சிறு தலைவலி, சோர்வு ஆகியவற்றை போக்க டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்”, என்றார்.

மேலும் செய்திகள்