தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- 300 வாழைகள் நாசம்

பவானிசாகரில் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் நாசம் ஆனது.

Update: 2021-05-06 23:10 GMT
பவானிசாகர்
பவானிசாகரில் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் நாசம் ஆனது.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. 
உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
வாழைகள் சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறி உள்ளன. இந்த யானைகள் அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலை கடந்து பள்ளிவாசல் பகுதிக்கு வந்தன. பின்னர் அந்த 5 யானைகளும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணசாமி என்பவருடைய வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. இதைத்்தொடர்ந்து யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாலை 4 மணி அளவில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். இதனால் 5 மணி அளவில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் ஆனது. 

மேலும் செய்திகள்