செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் விரக்தி அடைந்த 6-ம் வகுப்பு மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2021-05-07 23:58 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவருடைய மகன் ராகுல்ராஜ் (வயது 13). அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் அஜித் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் ராகுல்ராஜ் மட்டும் தனியாக இருந்தான். இரவு வேலை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் சமையல் அறையில் ராகுல்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செல்போன் வாங்கித்தர மறுப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், தூக்கில் தொங்கிய ராகுல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் ராகுல்ராஜ், தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும்படி கேட்டதாகவும், ஆனால் அவரது பெற்றோர், படிக்காமல் செல்போன் கேட்கிறாயா? என மகனை கண்டித்ததுடன், செல்போன் வாங்கித்தரவும் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ராகுல்ராஜ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்