கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை -ககன்தீப்சிங் பேடி பேட்டி

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

Update: 2021-05-08 16:29 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தினசரி சராசரி பாதிப்பு 400 ஆக உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கொரோனா தடுப்பு கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி நேற்று காலை கடலூர் வருகை தந்தார்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு பணி மேற்கொண்ட அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆய்வு

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2,089 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 498 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும், 1,591 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்சிஜன் படுக்கை

மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 168 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. இன்னும் 10 நாட்களில் கூடுதலாக 166 படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்படும். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இதுவரை இல்லை. தேவைக்கேற்ப அரசிடம் இருந்து ஆக்சிஜன் கேட்டு பெறப்படுகிறது. 
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களை அணுக வேண்டும். பின்னர் அவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா?, தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வேண்டுமா?, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாமா? என ஆலோசனை வழங்குவார்கள்.

ஆலோசனை

அதன் அடிப்படையில் கொரோனா நோயாளிகள் செயல்பட வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி கொரோனா நோயாளிகள் யாரும், தாமாக முடிவெடுத்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கக்கூடாது. மருத்துவர்கள் ஆலோசனை படியே செயல்பட வேண்டும்.

மேலும் மாவட்டத்திற்கு தேவையான, கூடுதல் மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை போல் சித்தா மருந்து வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் சித்தா மருந்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்கிலி உடைப்பு

முழுஊரடங்கின் போது பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றால் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பிறகு வீட்டுக்கு வந்ததும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா பரவல் என்ற சங்கிலியை உடைக்க முடியும். மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி உடைய படுக்கைகள் அனைத்தும் ஏறக்குறைய நிரம்பி விட்டன. இன்னும் சில படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக மாவட்டத்தில் மொத்தம் 3,567 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது 2,666 படுக்கைகள் காலியாகவே உள்ளன.

தனியார் ஆஸ்பத்திரி

மேலும் கடலூர் மாவட்டத்தில் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சளி, காய்ச்சல் அறிகுறியுடன் யாரேனும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றால், டாக்டர்கள் உடனே அதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுப்பதன் மூலம் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மீறி யாரேனும் சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மருந்து அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்