கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 204 பேர் உயிர் இழந்துள்ளனர். சரியான சிகிச்சை கிடைக்காமல் இந்த பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2021-05-08 18:31 GMT
பெங்களூரு:

வீட்டு தனிமையில் சிகிச்சை

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு சிகிச்சை பெறும் நோயாளிகளும் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் உயிர் இழந்து வருவது தெரிய வந்துள்ளது.

204 பேர் சாவு

அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்ற 204 பேர் உயிர் இழந்துள்ளனர். அவர்களில் 180 பேர் பெங்களூருவில் மட்டும் உயிர் இழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமும் 25 முதல் 30 பேர் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உயிர் இழந்து வருவது தெரிய வந்துள்ளது. வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு காரணங்களால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை இருக்கிறது.
அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தாமதமாவதால் வீட்டு தனிமையில் இருப்பவர்களும் கொரோனாவுக்கு பலியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்