சென்னை விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீடுகளை சுத்தம் செய்யும் கருவிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-08 21:45 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த மதிவல்லபன் கருணாமூர்த்தி (வயது 23) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில், வீடுகளை சுத்தம் செய்யும் (‘வேக்கம் கிளீனர்’) கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து சோதனை செய்தபோது அதன் உள்ளே தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதிவல்லபன் கருணாமூர்த்தியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்