சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-05-09 17:19 GMT
விழுப்புரம், 

முழுஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களாக தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பஸ் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்களில் செல்கிறார்கள். அந்த வகையில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல விழுப்புரம், கள்ளக்குறிச்சி பஸ் நிலையங்களில் நேற்று மதியம் குவிந்தனர்.

கொரோனா தொற்று பரவும் அபாயம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை போன்ற பல்வேறு நகர பகுதிகளுக்கு குறைந்த அளவு பஸ்கள் இயக்கபட்டதால் பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெளியூர் சென்ற பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் சென்றனர்.
மேலும் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் கூட்ட நெரிசலில் தவிர்க்க பயணிகளை வரிசைப்படுத்தி பஸ்களில் ஏற்றி விட்டனர். 
ஒரே நேரத்தில் அதிக அளவு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல விழுப்புரம் பஸ் நிலையத்தில் குவிந்ததால் சமூக  இடைவெளியை மறந்து ஒருவரையொருவர் முண்டியடித்தபடி பஸ்களில் ஏறிச்சென்றதால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல் வெளியூர் செல்வதற்காக ஏராளமான பயணிகள் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்