வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

ராமநத்தம் அருகே வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-09 19:07 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அருகே  டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சிலம்பரசனின் மனைவி கவுதமி, தாயார் கனகம் மற்றும் தங்கை ரேவதி, அவருடைய கணவர் ஆனந்த் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு காற்றுக்காக வீட்டின் முன்புறம் உள்ள வராண்டா பகுதியில் படுத்து தூங்கினர். சிலம்பரசன் மாடியில் படுத்து தூங்கினார்.
 நேற்று காலை அவர்கள் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போய் இருந்தது. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 
இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து மோப்பநாய்  ஹூப்பர் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த  வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.  யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.5¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்