கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி

சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலியானார்.

Update: 2021-05-10 16:40 GMT
பொள்ளாச்சி

சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலியானார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கிணற்றில் தவறி விழுந்தார் 

பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் அகல்யா (வயது 17). இவர் துணி துவைக்க சோப்பு வாங்க அதே பகுதியில் உள்ள கடைக்கு தனது சைக்கிளில் சென்றார். பின்னர் சோப்பு வாங்கி விட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது  அவர் தோட்டத்து சாலை வழியாக வந்தபோது திடீரென்று சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் அந்த சைக்கிள் அருகே உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் அவர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

பரிதாப சாவு 

இந்த நிலையில் கடைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அகல்யாவை தேடினார்கள். அத்துடன் அங்குள்ள கடைக்கு சென்று விசாரித்தபோது, சோப்பு வாங்கிவிட்டு சென்றதாக கடைகாரர் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் அகல்யா வீட்டிற்கு வரும் பாதை வழியாக தேடினார்கள். அப்போது அங்குள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் அகல்யா சென்ற சைக்கிள் சிக்கி தொங்கி இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பார்த்தபோது அவர் அங்கு அவர் பிணமாக கிடந்தார். 

போலீசார் விசாரணை 

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அத்துடன் அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்