விராலிமலை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளிகள் 2 பேர் பலி

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-05-10 18:23 GMT
விராலிமலை
கூலித்தொழிலாளிகள் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூர் காலனியை சேர்ந்தவர் குட்டைக்கண்ணு (வயது 62). இவரது நண்பர் நடராஜன் (60). கூலித்தொழிலாளிகள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். 
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேர் பலி 
இதில் படுகாயமடைந்த குட்டைக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நடராஜனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டைக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவை சேர்ந்த செல்லபாண்டி மகன் முனியாண்டி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கூலித்தொழிலாளிகள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்