கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு: சேலத்தில் கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை

முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-05-10 20:30 GMT
சேலம்:
முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பால், மருந்து கடைகள் மட்டும் தொடர்ந்து திறந்திருக்கவும், மற்றபடி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர மற்ற வணிகம் சார்ந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் என போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடைகள் அடைப்பு
சேலம் மாநகரில் கடைவீதி, செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், அஸ்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. அதன்பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் ஜவுளி, நகைக்கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை பகுதியில் மொத்த மளிகை மற்றும் பாத்திரக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மதியம் 12 மணி வரையிலும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏராளமானோர் அங்காங்கே சென்று வந்ததை காணமுடிந்தது. அவர்களை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை.
காய்கறி சந்தைகள் மாற்றம்
இதேபோல், சேலம் ஆனந்தா ஆற்றோரத்தில் இயங்கிய தினசரி பாதையோர காய்கறி சந்தை, செவ்வாய்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்திலும், சூரமங்கலம் உழவர் சந்தை 3 ரோடு ஜவகர் மில் திடலிலும், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் காய்கறி சந்தை புதிய பஸ் நிலையத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று செயல்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். சூரமங்கலம் தவிர அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகள் வழக்கம்போல் அதே இடங்களில் செயல்பட்டன. அங்கு வந்த மக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
பஸ்கள் ஓடவில்லை
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அரசு பஸ்கள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் நேற்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அதேபோல், வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. அரசு உத்தரவுப்படி அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. ஓட்டலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
அபராதம்
சேலத்தில் முழு ஊரடங்கை மீறி மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படுகிறதா? என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்தனர். பல இடங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததற்காக ஒரு சில மளிகை கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
முழு ஊரடங்கு காரணமாக ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, இளம்பிள்ளை, ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால், சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கையொட்டி மதியம் 12 மணிக்கு பிறகு பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.

மேலும் செய்திகள்