முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. மேலும் கடைகள் அடைக்கப்பட்டது. ஆட்டோக்களும் இயங்கவில்லை.

Update: 2021-05-10 22:35 GMT

திருச்சி, 
முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. மேலும் கடைகள் அடைக்கப்பட்டது. ஆட்டோக்களும் இயங்கவில்லை.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. வருகிற 24-ந் தேதிவரை இது நீடிப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முழு ஊரடங்கில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் படி ேநற்று திருச்சி மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் மற்றும் கனரக வாகனங்களும் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழுமையாக இயக்கப்பட்டன. நேற்று முழு ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் ஓடவில்லை. 

வெறிச்சோடின

அவைகள் ஆங்காங்கே அரசு போக்குவரத்து பணிமனைகளிலும், தனியார் ஷெட்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ்நிலையம், மணப்பாறை பஸ்நிலையம், முசிறி பஸ்நிலையம், துறையூர் பஸ்நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஸ்நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்குள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

மேலும் திருச்சி மாநகர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர் கடைகள் என்று அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் தனியாக செயல்படும் மளிகைக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை வழக்கம்போல இயங்கின. டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

கனிவுடன் எச்சரிக்கை

முக்கிய சந்திப்புகளில் போலீசாரால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு சாலை தடை செய்யப்பட்டிருந்தன. அதே வேளையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையில் பெரும்பாலும் வலம் வந்ததை காண முடிந்தது. அவர்களை மடக்கிய போலீசார் கனிவுடன் எச்சரித்து அனுப்பினர்.

சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் கண்டு கொள்ள வில்லை. பொதுமக்களிடம் போலீசாரின் அணுகுமுறை கனிவுடன் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி.திரிபாதி அறிவித்ததன் காரணமாக கெடுபிடி ஏதும் இல்லாமல் இருந்தது.

அரசு அலுவலகம் இயங்கவில்லை

ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததாலும் ஆஸ்பத்திரி, மெடிக்கல், பால் வினியோகம் உள்ளிட்டவை 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் துறை, கருவூலங்கள், மின் துறை உள்ளிட்டவை இயங்கின. 
அதே வேளையில் இதர மாநில அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால், அதிகாரிகள், ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதுபோல அனைத்து தனியார் நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டதால், அவை இயங்கவில்லை. 

பார்சல் சேவை

விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டும் தடையின்றி இயங்கியது. ஓட்டலில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் 10 மணி, பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி, மாலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டுமே பார்சல் சேவைக்காக ஓட்டல்கள் திறந்திருந்தன. 

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் தடையின்றி இயங்கின. ரேஷன் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தாலும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன.

களையிழந்த காந்தி மார்க்கெட்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரவு மொத்த விற்பனை வழக்கம்போல நடந்தது. காலை 4 மணி முதல் பகல் 12 மணிவரை வழக்கம்போல சில்லறை காய்கறிகள் தடையின்றி விற்பனை ஆனது. அதே வேளையில் காய்கறிகள் வாங்க, பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. காரணம், பஸ் மற்றும் ஆட்டோக்கள் ஓடாததே என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன், காராணமாக காந்தி மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது.

இதேபோல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். இதனால் எப்போதும் அந்தசாலை பரபரப்பாக காணப்படும். நேற்று முழுஊரடங்கு காரணமாக இந்த சாலைவழியே எந்த வாகனங்களும் செல்லாததால் அந்தபகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
மணப்பாறை, மே.11-

மேலும் செய்திகள்