சென்னை கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த கொள்ளையனை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்

சென்னை கல்லூரி மாணவியிடம் லட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றனர்.

Update: 2021-05-11 10:09 GMT
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (வயது 22). தரமணியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், விமானத்தில் சேலம் செல்வதற்காக தனது நண்பருடன் ஸ்கூட்டியில் விமான நிலையம் நோக்கி வந்தார். பரங்கிமலை சிமெண்ட் சாலை அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மாணவி சுவேதாவிடம் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பரங்கிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் ஜோசப்பிடம் தெரிவித்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் கொள்ளையர்களை விரட்டிச்சென்றார்.தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகே ஒரு கொள்ளையனை மடக்கி பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் விசாரித்தபோது அவர், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த பார்த்திபன் (19) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்பேரில் தப்பி ஓடிய அவரது கூட்டாளியான ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சாமுவேல் (22) என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான பார்த்திபன், சாமுவேல் இருவரையும் சிறையில் அடைத்தனர். செல்போன் கொள்ளையனை விரட்டிபிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் ஜோசப்பை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்