கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் 860 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.

Update: 2021-05-11 16:50 GMT
கள்ளக்குறிச்சி

14 ஆயிரத்தை தாண்டியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது. பல்வேறு மருத்துவமனை மற்றும் முகாம்களில் 1,050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் ‘வென்டிலேட்டர்’ வசதியுடன் 25 படுக்கைகளும், ‘ஆக்சிஜன்’ வசதியுடன் 225 படுக்கைகளும் உள்ளன. சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கூடுதல் சிகிச்சை மையத்தில் 100 ‘ஆக்சிஜன்’ படுக்கைகள் உள்பட மொத்தம் 200 படுக்கைகள் உள்ளன. 

கண்காணிப்பு மையம்

இது தவிர சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் 56 ‘ஆக்சிஜன்’ படுக்கை வசதி உள்பட 120 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.கல்லூரி, சங்கராபுரம் பாலிடெக்னிக் கல்லூரி, அயன்வேலூர் மாதிரிப்பள்ளி, குமாரமங்கலம் மாதிரிப்பள்ளி, ஜி.அரியூர் மாதிரிப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையங்கள் 670 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 4 தனியார் மருத்துவமனைகளில் 160 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதலாக கொரோனா சிகிச்சை கண்காணிப்பு மையம் அமைக்க கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து  கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 300 ‘ஆக்சிஜன்’ படுக்கை வசதியுடன் மொத்தம் 860 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சை மையத்தில் படுக்கைகள், மின்விசிறி, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என பார்வையிட்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார், வட்டார மருத்துவர் பங்கஜம், மருத்துவர் சிவக்குமார், தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்