கொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு

கொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்.

Update: 2021-05-13 05:01 GMT
தாம்பரம், 

சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுரேஷ்குமார். 2017-ம் ஆண்டு முதல் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் உயிரிழந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுரேஷ்குமார் உருவ படத்துக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையில் இதுவரை போலீஸ் துறையில் 10 பேர் இறந்துள்ளனர். இதில் 6 பேர் போக்குவரத்து போலீஸ்காரர்களாக பணியாற்றி வந்தவர்கள். போலீஸ்காரர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனாவால் போலீஸ்காரர்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், போலீஸ்காரர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேபோல் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், பாலாஜி ஆகியோரின் உருவப்படங்களுக்கும் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்