2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு: திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெறிச்சோடிய சாலைகள்

2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட 14 நாட்கள் ஊரடங்கு காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடியது.

Update: 2021-05-13 10:49 GMT
ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தொற்றால் பலியாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு வருகின்ற 24-ந் தேதி வரை இரண்டு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இந்த ஊரடங்கின் போது 12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கவேண்டும். மேலும் அத்தியாவசிய கடைகளான ஓட்டல்கள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்து இருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த ஊரடங்கின் போது பஸ்போக்குவரத்தும், டாஸ்மாக் கடைகளை மூடவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

வெறிச்சோடியது
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட்டு இருப்பதால், திருவள்ளூர் ஜே. என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, காக்களூர் சாலை, ஆவடி சாலை, செங்குன்றம் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.திருவள்ளூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவள்ளூர் பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றியும், பஸ்கள் இல்லாமலும் வெறிச்சோடி உள்ளது. அதேபோல மணவாளநகர், ஒண்டிகுப்பம், திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்