கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை; புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் பேட்டி

கொரோனா சூழலில் பதவி ஏற்பு முக்கியமில்லை என்று பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2021-05-15 11:57 GMT

புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரங்கசாமி நலமாக இருக்கிறார்

புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மத்திய அரசிடம் இருந்து புதுவை மாநிலத்திற்கு கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து புதுச்சேரி திரும்ப உள்ளார். அதன் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கூட்டணியில் குழப்பத்தை...

தற்போது கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில் பதவியேற்பு எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். அது தான் எங்களுக்கு முக்கியம். என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது.

புதுவையில் அடுத்த 5 ஆண்டுகள் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி சிறப்பாக ஆட்சி செய்யும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்