வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

Update: 2021-05-15 19:11 GMT
பெரம்பலூர்:

வீடு, வீடாக சென்று பரிசோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கொரோனா பாதித்த பகுதிகளை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூக்கு மனமின்மை போன்றவை இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சந்தேகங்களுக்கு...
பொதுமக்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 9154155097 மற்றும் 18004254556, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கொரோனா பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற்றிடவும், கொரோனா குறித்த விளக்கங்கள் பெற்றிடவும் 9384056223 என்ற அவசர தொலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-296209 என்ற தொலைபேசி எண்ணிலும், அவசர உதவி எண் (இலவச சேவை எண்) 181-லும், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகியை 6380469886 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கோள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்