பிறந்த 5 நாட்களில் அனாதை ஆன பச்சிளம் குழந்தை

கொரோனாவுக்கு தம்பதி உயிர் இழந்ததால் பிறந்த 5 நாட்களில் அனாதை ஆன பச்சிளம் குழந்தை

Update: 2021-05-15 19:14 GMT
பெங்களூரு:

மண்டியா அருகே கொரோனாவுக்கு தம்பதி பலியானதால், பிறந்து 5 நாட்களில் பச்சிளம் குழந்தை அனாதை ஆன சம்பவம் நடந்துள்ளது.

9 ஆண்டுக்கு பின்பு...

பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதுடன், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரேனாா பாதிப்புக்கு உள்ளான தம்பதி உயிர் இழந்ததால் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை அனாதை ஆன சம்பவம் மண்டியா மாவட்டத்தில் நடந்துள்ளது.

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா தொட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா (வயது 43). இவருடைய மனைவி மமதா (32).
இந்த தம்பதி சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் வசித்து வந்தனர். சமீபத்தில் தான் அவர்கள் நாகமங்களாவுக்கு குடிபெயர்ந்திருந்தனர். இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்போது மமதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

தம்பதி பலி

இந்த நிலையில், நஞ்சேகவுடாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். நஞ்சேகவுடாவுக்கு கொரோனா இருந்ததால், மமதாவுக்கும் வைரஸ் தொற்று பரவியது. 

இதற்காக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கடந்த 11-ந் தேதி மமதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா பாதிப்பு இருந்தாலும் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் மமதாவை அறிவுறுத்தி இருந்தனர். 

அதன்படி, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற மமதாவுக்கு நேற்று முன்தினம் மாலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நஞ்சேகவுடா, மமதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தும், 2 பேரும் கொரோனாவுக்கு பலியாகி விட்டதால், தற்போது அந்த குழந்தை பெற்றோர் இல்லாமல் அனாதை ஆகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்