கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கள்ளக்காதலனும் தூக்கில் தொங்கினார்

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதலனும் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-05-16 02:15 GMT
சென்னை, 

செங்கல்பட்டு கைலாசநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 38). இவர், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கன்னியம்மாளுக்கும், அதே பகுதி தட்டான் மலை தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (45) என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுரேசுக்கும், ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த கோபி, மனைவியை கண்டித்தார். சுரேசுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இதுதொடர்பாக கோபி, சுரேஷ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்கு வந்த கோபி, தனது மனைவி கன்னியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை கோபி, கன்னியம்மாள் இருவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், கணவன்-மனைவி இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக சுரேசிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதனை அறிந்த சுரேஷ், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே நேரத்தில் தனது தாய்-தந்தையை இழந்து கோபி-கன்னியம்மாளின் மகள் அனாதையானார். அதேநேரத்தில் தந்தையை இழந்து சுரேஷின் 3 மகள்களும் தாயுடன் பரிதவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்