கொரோனா சிகிச்சை மையங்களில் பயன்படுத்த சென்னை மாநகராட்சிக்கு 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள்; சாம்சங் நிறுவனம் வழங்கியது

கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சியின் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் நன்கொடையாகவும் பெறப்பட்டு வருகின்றன.

Update: 2021-05-16 09:57 GMT
அந்தவகையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அந்த நிறுவனத்தின் இயக்குனர் கண்ணன், வணிகவரி துறை முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வழங்கினார். மேலும், சாம்சங் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7 கோடியே 50 லட்சம் 
வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 975 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் எல்.டி.எஸ். சிரஞ்சிகள் அடுத்தகட்டமாக வழங்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்தனர். அவர்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பாராட்டியதோடு, கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்