சென்னை விமான நிலையத்தில் ரூ.89 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-05-16 22:05 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது அஸ்ரப் (வயது 21) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் ஒருவித பதற்றத்துடன் இருந்தார். அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாகவும் பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

ஆனால் அவர் நடக்கும்போது ஒரு காலை நொண்டியபடி ஒருவிதமாக நடந்து வந்தார். அதுபற்றி அதிகாரிகள் கேட்டதற்கு, கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக காலில் கட்டுப்போட்டு இருப்பதாகவும் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது காலில் கட்டி இருந்த கட்டை பிரித்து சோதனை செய்தனர். அதில் அந்த கட்டுக்குள் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முகமது அஸ்ரப்பை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர். அதில், துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் ஏற வந்தபோது அங்கிருந்த ஒருவர் இதை எனது காலில் கட்டிவிட்டார். சென்னை விமான நிலையத்தில் ஒருவர் வந்து இந்த கட்டை பெற்றுக்கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தார்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரை விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்திருந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்