எழும்பூர் ன்போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் 104 படுக்கைகள் தயார் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 104 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதனை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.

Update: 2021-05-16 23:22 GMT
சென்னை, 

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தினமும் 33 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதில் சிரமப்படும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனால் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் நீண்ட வண்ணம் இருக்கிறது. தமிழக அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகமானோர் சிகிச்சைக்காக குவிகின்றனர்.

அந்த வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை சென்னையில் பல இடங்களில் மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 104 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டனர்.

அப்போது அறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் படுக்கை அறைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த பள்ளியில் 13 அறைகளில் 104 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு இங்கு அனுமதிக்கப்படுபவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க 3 மருத்துவ ஆலோசகர்கள், 7 டாக்டர்கள் மற்றும் 24 நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடங்களை கல்லூரிகள், பள்ளிகள் வழங்குவது வழக்கம். ஆனால் டான்போஸ்கோ பள்ளியை பொறுத்தவரையில் இடம் கொடுப்பதோடு, சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளையும், சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்களுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்வதாக கூறி இருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்