வல்லம் பகுதியில், ஊரடங்கு விதிகளை மீறி மீன்- இறைச்சி, டீ விற்பனை அமோகம்

வல்லம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி மீன்- இறைச்சி, டீ விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2021-05-17 13:11 GMT
வல்லம்,

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வல்லம் அருகே வண்ணாரப்பேட்டையில் இருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள காலியிடங்களில் மீன் மற்றும் கோழி இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது.

அங்கு வியாபாரிகள் மீன், கோழி இறைச்சியை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதை வாங்குவதற்காக அங்கு ஏராளமானோர் திரண்டனர். அதில் பலர் முக கவசம் கூட அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை.

சரக்கு வேன் பறிமுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு, வருவாய் ஆய்வாளர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அங்கு மீன் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீன்கள் கொண்டு வர பயன்படுத்திய சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே அந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு பல பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அங்கு பொதுமக்கள் முழு ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்க விட்டு கூட்டம், கூட்டமாக இறைச்சி வாங்க திரண்டதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டீ விற்பனை

இதேபோல் பிள்ளையார்பட்டி- திருவையாறு புறவழிச் சாலை, வல்லம்-மருத்துவக்கல்லூரி சாலை ஆகிய இடங்களில் பலர் நடைபயிற்சி மேற்கொள்ள திரண்டனர். வல்லம்- மருத்துவக் கல்லூரி சாலையில் டீ கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதனால் சைக்கிள், ஸ்கூட்டர்களில் கேன்களில் டீ கொண்டு வந்து சிலர் விற்பனை செய்தனர். அங்கும் ஏராளமானவர்கள் சமூக இடைவெளியின்றி கூடி நின்று டீ குடித்தனர்.

மேலும் செய்திகள்