சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் கைது

கோலார் அருகே சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் திடீரென கைது செய்யப்பட்டு உள்ளார். பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-05-17 18:43 GMT
கோலார், மே.18-

கோலார் அருகே சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் திடீரென கைது செய்யப்பட்டு உள்ளார். பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர்

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(வயது 30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமிக்கு சுப்ரியா(20) என்ற அக்காள் உள்ளார். 

ஆனால் வாய் பேச முடியாத மாற்று திறனாளியான சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் உமாபதியிடம் அந்த சிறுமி தன்னையும், அக்காளையும் திருமணம் செய்து கொள்ள கேட்டு உள்ளார்.

 அதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி நேற்று முன்தினம் ஒரே மேடையில் 2 பேரையும் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணம் கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.

கைது
இந்த நிலையில் சகோதரிகளை உமாபதி திருமணம் செய்தது பற்றி அறிந்த முல்பாகல் தாலுகா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் நேற்று வேகமடுகு கிராமத்திற்கு சென்றார். 

அங்கு சுப்ரியா மற்றும் அவரது தங்கையின் பிறப்பு சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சுப்ரியா தங்கைக்கு 17 வயது ஆவது தான் தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது ரமேஷ் முல்பாகல் போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமாபதியை கைது செய்தனர். மேலும் திருமண்ததிற்கு உடந்தையாக இருந்த உமாபதியின் தந்தை சன்னராயப்பா, தாய் தொட்ட லட்சுமம்மா, பெண்ணின் தந்தை நாகராஜப்பா, தாய் ராணியம்மா, அச்சகத்தின் உரிமையாளர், அர்ச்சகர் உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்