ஊரடங்கு உத்தரவை மீறிய 204 பேர் மீது வழக்கு

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிவந்த 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-17 20:36 GMT
மதுரை
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிவந்த 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு
மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
மதுரை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவுப்படி, இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
அவசர மருத்துவ காரணங்கள் நீங்கலாக, மற்ற காரணங்களுக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் இ-பதிவு பெற்று செல்ல வேண்டும். 
மேலும், தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவினை அனைத்து பொதுமக்களும் கடைபிடித்து கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 
மேலும், இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
204 வழக்குகள்
மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் மீது இதுவரை இதுவரை 204 வழக்குகள் பதிவு செய்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து 202 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலைய சரகத்திலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரை கொண்ட கொரோனா கட்டுப்பாடு அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 
அரசு அனுமதித்துள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள், நிறுவனங்கள் திறந்து இருந்தால் கொரோனா கட்டுப்பாடு அமலாக்க குழுவினால் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைக்கப்படும். அதேபோல் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு (காலை 6 மணி முதல் 10 மணி வரை) பிறகு கடைகள் திறந்திருந்தால், கொரோனா கட்டுப்பாடு அமலாக்க குழுவினால் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும், போலீசார் பொதுமக்களுடன் நல்லுறவை பேணும் வண்ணம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்