ஈரோட்டில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை- 400 குழுக்கள் அமைப்பு

ஈரோட்டில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 400 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2021-05-17 22:51 GMT
ஈரோடு
ஈரோட்டில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 400 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பொறுப்பாளர் நியமனம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, அவர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் ஈரோடு மாநகராட்சியில் 1,200 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
400 குழுக்கள்
தமிழக அரசின் உத்தரவின்பேரில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலத்துக்கு உள்பட்ட மொத்தம் 60 வார்டுகளிலும் சிறப்பு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி 100 வீட்டுக்கு ஒருவர் வீதம் மொத்தம் 1,200 பேர் கொண்ட 400 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று தொற்றின் அறிகுறி உடையவர்களை கண்டறிவார்கள். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு உள்ளதா என்று கேட்டறிவதுடன், பாதிப்பு உள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை செய்வதற்கும், சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்து கொரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வீடுகளுக்கு வரும் பொறுப்பாளருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.

மேலும் செய்திகள்