கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை

காரைக்குடி பகுதியில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-05-19 20:16 GMT
காரைக்குடி
காரைக்குடி பகுதியில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருமி நாசினி தெளிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2-வது அலையாக தற்போது வேகமாக பரவி வருவதையொட்டி வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொரோனா பரவல் சிவகங்கை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நகர் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல், கபசுர குடிநீர் வினியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் துப்பரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, பிளிச்சிங் பவுடர் தூவும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆய்வு
காரைக்குடி பகுதியில் புதிய பஸ் நிலையம், 100 அடி சாலை, பழைய பஸ் நிலையம், செக்காலை சாலை, கல்லூரி சாலை, ரெயில்வே ரோடு, பழைய அரசு மருத்துவமனை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  நகராட்சி வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன், சுந்தர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு அறிவுரைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடு குறித்த ஆலோசனை வழங்கினார். அப்போது காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
திருப்புவனம்
திருப்புவனத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் வாகனத்தின் மூலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழரத வீதி வரை மருந்து தெளித்தனர். இதேபோல் கோரக்கநாதர் கோவில் பகுதி, வடக்கு ரத வீதி, மேல ரதவீதி, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் காலனி ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்