கும்மிடிப்பூண்டி முகாமில் கஞ்சா விற்ற இலங்கை வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி முகாமில் கஞ்சா விற்ற இலங்கை வாலிபர் கைது.

Update: 2021-05-20 13:24 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று முகாமில் உள்ள மைதானம் அருகே அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்கிற பத்மநாதன் (வயது 25) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். லாரி டிரைவரான இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து முகாமில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கை வாலிபர் சின்னதம்பியை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்