கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்கறி விற்பனை

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கியது.

Update: 2021-05-20 18:00 GMT
கரூர் 
கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் நோயை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மீறி ஊரடங்கு உத்தரவை மீறி கரூர் மாவட்டத்தில் வாகனத்தில் சுற்றி திரியும் நபர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மருந்துகடைகள், காய்கறிகள் வாங்க என பலர் உழவர்சந்தைக்கும், மார்க்கெட் செல்வதாக கூறி சுற்றித்திரிந்து வந்ததால் கரூர் உழவர்சந்தை மற்றும் காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கரூர் உழவர் சந்தை வெளிப்புறத்தில் உள்ள தரைக்கடைகளை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டும், காமராஜ் மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்க மார்க்கெட் நுழைவு வாயிலில் கயிறு கட்டப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
விற்பனை தொடங்கியது
மேலும் காய்கறிகள் வாங்க வரும் பொது மக்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த அந்த பகுதிகளில் வீட்டின் அருகே வாங்கி கொள்ளும் வகையில் உழவர் சந்தையில் வாங்கும் அதே விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடமாடும் காய்கறிகடைகளை நேற்று நகராட்சி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாகனம் மூலம் 48 வாகனத்தில் நகராட்சி மூலம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பிடத்திலேயே...
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திலையே, உழவர் சந்தை விலைக்கு காய்கறிகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்திலையே காய்கறிகளை வாங்கி பயன் பெறலாம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்