பாளையங்கோட்டையில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு

பாளையங்கோட்டையில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-20 19:27 GMT
நெல்லை, மே:
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஊரடங்கு மீறல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரையும், பால், மருந்து கடைகள் முழு நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மற்ற எந்த கடைகளும் திறக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை மீறி திறக்கப்படும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள், அபராதம் மற்றும் சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சீல் வைப்பு

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், உத்தரவுப்படி மாநகர நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் அரசகுமார், ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று பாளையங்கோட்டை பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் ஆய்வு நடத்திய போது அரசு உத்தரவை மீறி ஒரு ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதுதொடர்பாக அறிவிப்பாணையை கடையில் ஒட்டினர்.
இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். ஊரடங்கு முடியும் வரை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிடப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்