நீடாமங்கலத்தில், மினி லாரியில் கும்பலாக சென்றவர்களுக்கு ‘சமூக இடைவெளி’ பாடம் நடத்திய போலீசார்

நீடாமங்கலத்தில் மினி லாரியில் கும்பலாக சென்றவர்களுக்கு போலீசார் சமூக இடைவெளி குறித்து பாடம் நடத்தினர்.

Update: 2021-05-21 11:24 GMT
நீடாமங்கலம்,

கொரோனா காலத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலர் சமூக இடைவெளியை மறந்து கும்பலாக கூடி நின்று கொரோனாவை வரவழைத்துக்ெகாள்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா விலகவே, விலகாதோ? கட்டுப்பாடுகள் தளரவே தளராதோ? என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுதல் போன்ற தனிமனித ஒழுக்க செயல்கள் தான் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் முக்கிய காரணிகளாகும். ஆனால் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத சூழல் உள்ளது.

பாடம் நடத்திய போலீசார்

இந்த நிலையில் நீடாமங்கலம் நகர பகுதி வழியாக நேற்று மினிலாரியில் சிலர் கும்பலாக சென்று கொண்டிருந்தனர். இதை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவனித்து, கும்பலாக சென்றவர்களை தடுத்து மினி லாரியில் இருந்து கீழே இறங்க செய்தனர். பின்னர் அவர்களை, சாலையோரம் சமூக இடைவெளியுடன் நிற்கவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் சமூக இடைவெளி குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்று தருவதுபோல பாடம் நடத்தினர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறுபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், இதுபோன்று கொரோனா விழிப்புணர்வில் போலீசார் ஈடுபடுவதை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்