ஆலங்குடியில் வாழைகள் சேதம்

ஆலங்குடியில் வாழைகள் சேதமடைந்தன.

Update: 2021-05-21 18:08 GMT
புதுக்கோட்டை, மே.22-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது, பலத்த காற்று வீசியதால் ஆலங்குடியில் வாழைகள் சேதமடைந்தன.
வாழைகள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அப்போது, சூறைக்காற்று வீசியது. அடிக்கடி மின்னலடித்தது. இந்த கோடை மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே பாப்பன்பட்டி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வாழைகள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் பல வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் உசிலங்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகம் இல்லை. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருமேகங்கள் மட்டும் திரண்டு இருந்தன.
திருவரங்குளம்
இதேபோல் திருவரங்குளம் அருகே உள்ள மாஞ்சன் விடுதி ஊராட்சி பாப்பன்பட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் மழைபெய்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சுமார் ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்