கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அருகே கார் மோதி இளம்பெண் சாவு; டிரைவரை பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்

சென்னை பட்டாளத்தை சேர்ந்த ஆறுமுகன் என்பவருடைய மகள் யமுனா (வயது 21). இவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஈ.சி.ஜி. பிரிவில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

Update: 2021-05-21 21:38 GMT
யமுனா நேற்று மதியம் பணிமுடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு தனது மொபட்டில் புறப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேவந்து அருகேயுள்ள பர்னபி சாலையை கடந்தபோது, எதிரே வந்த கார் வேகமாக மோதியது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி யமுனா மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளை விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை, வாகன ஓட்டிகள் விரட்டி பிடித்து மடக்கினர். 

காரை ஓட்டிய கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அப்துல் கவுஹீம் (37) என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதற்கிடையில் யமுனாவின் உடல்நிலை மோசமடையவே, அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்