நெல்லையில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்- போலீசார் நடவடிக்கை

நெல்லையில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-22 20:24 GMT
நெல்லை, மே:
நெல்லையில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.

ஊரடங்கு விதிமீறல்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது போலீசார், உள்ளாட்சி துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாநகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரை பிடித்து கொரோனா விழிப்புணர்வு குறித்தும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அத்துமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

வாகனங்கள் பறிமுதல்

இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அத்தியாவசிய தேவையின்றி வந்த 9 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை மீட்பு வாகனங்கள் மூலம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல் நெல்லை மாநகரம் முழுவதும் நேற்று போலீசார் ஏராளமான வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படுவதோடு, கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே திருப்பி அளிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அவசியமின்றி வாகனங்களில் வெளியே வந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

நூதன தண்டனை

இதுதவிர சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து போலீசார் நூதன தண்டனை வழங்கினார்கள். ஒவ்வொருவரும் தலா 5️ திருக்குறள் எழுதி, அதன் பிறகு இனிமேல் வெளியே சுற்றித்திரிய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தனர். போலீசார் அவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்