மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊரடங்கை மீறியவர்களின் 100 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊரடங்கை மீறியவர்களின் 100 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-23 04:22 GMT
மாமல்லபுரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பற்றிய அச்சம் சிறிது கூட இல்லாமால் பலர் பொய்யான காரணங்களை கூறி ஊர் சுற்றி வந்தனர். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி நாளுக்கு நாள் உயரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபடும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், குப்புசாமி மற்றும் போலீசார் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடியவர்கள், ஓட்டல் பணிக்கு செல்லக்கூடியவர்களை மட்டும் அவர்கள் கொண்டு சென்ற உரிய ஆவனங்களை பார்த்து அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். குறிப்பாக மருந்து வாங்க செல்கிறேன். ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன். தனக்கு காய்ச்சல் என பொய்யான காரணங்களை கூறி செல்ல முயன்றவர்களின் 100 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீஸ் நிலைய பின்புறம் உள்ள மைதானத்தில் போலீசார் நிறுத்தி பாதுகாத்து வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரியர்களிடம் ஒப்படைக்க உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பாதுகாக்க போலீசார் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக மாமல்லபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் செல்வதையும் காண முடிகிறது. உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து உரிய தகவல் வந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்